அதிமுக அலுவலக சீல் வழக்கு! நீதிபதி நாளை உத்தரவு!

அரசியல்

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை (ஜூலை 20) உத்தரவு பிறப்பிக்கிறது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு தரப்புக்கும் ஏற்பட்ட வன்முறை காரணமாக, கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பும் வரும் ஜூலை 25ம் தேதி விளக்கமளிக்கும்படியும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இருதரப்பும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த இரு வழக்குகளும் உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சதீஷ்குமார், ’ஜூலை 11 ஆம் தேதி காலை முதல் நடந்த சம்பவங்களை வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி மறுநாள் (ஜூலை 15) விசாரணையின்போது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து காவல் துறை, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை வைத்தனர்.

அப்போது, “இருதரப்பிலும் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சினை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சீல்வைத்த உத்தரவை ரத்து செய்தால், மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம்” என காவல் துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது.

”கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ. பார்க்க வேண்டுமே தவிர, யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது” என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

”அந்தக் கட்சி அலுவலகம் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமானதாக இருந்தால், அவர் ஏன் கட்சி அலுவலகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும்” எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வாதம் வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல், ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். தற்போது இந்த வழக்கில் நாளை (ஜூலை 20) மதியம் 2.15 மணிக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பிக்க இருக்கிறார்.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *