அதிமுக அலுவலகத்துக்கு சீல்: நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி

Published On:

| By Guru Krishna Hari

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டனர். தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய வரும் 25ஆம் தேதி ஆஜராகுமாறு இருதரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருவாய்த் துறை

இந்நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் எனவும் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று (ஜூலை 12) காலை முறையீடு செய்தார்.

இதைக் கேட்ட நீதிபதி, மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை (ஜூலை 13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share