அதிமுக தலைமை கழகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிற்கு ஈபிஎஸ் இன்று (செப்டம்பர் 11) பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூலை 11 ஆம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனால் வருவாய்த் துறையினர் அதிமுக அலுவலகத்துக்குச் சீல் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகம் சீல் அகற்றக் கோரிய வழக்கு விசாரணைக்குப் பிறகு அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அதன் படி அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை கோட்டாட்சியர் மற்றும் ஈபிஎஸ் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவிற்குப் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. மேலும், நாளை ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் ஈபிஎஸ் இன்று (செப்டம்பர் 11) உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் “ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது அதிமுக அலுவலகத்தின் உரிமையை அவர் கோர முடியாது.
அவரிடம் அதிமுக அலுவலகத்தின் சாவியை எப்படி ஒப்படைக்க முடியும்? அவர் அதிமுக தலைமை அலுவலகத்தைச் சூறையாடியிருக்கிறார். உள்ளேயிருந்து நிறையப் பொருட்கள் காணாமல் போயிருக்கிறது.
கடுமையான வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இப்படிப் பட்ட ஒருவரிடம் அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்கவும் முடியாது, ஒப்படைக்கவும் கூடாது.
அதிமுகவிற்கும் ஓபிஎஸ்-க்கும் எந்த தொடர்பும் கிடையாது. அப்படி தொடர்பில்லாத ஒருவர் அலுவலகத்தின் சாவியைக் கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பது சரியானது அல்ல.
மேலும் கட்சி நிதி விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல்கள் செய்துள்ளார். நீதிமன்றம் சாவியை அவரிடம் ஒப்படைக்காமல் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வருவாய்க் கோட்டாட்சியர் சார்பாகவும் தனியாகப் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
”கலவரம் குறித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்ட விதிமுறைகள் முழுவதுமாக பின்பற்றப்பட்டுள்ளது”என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் ஓபிஎஸ்சின் மேல் முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
மோனிஷா
அதிமுக அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி : செண்டை மேளத்துடன் வரவேற்பு!