அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 4) உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு நடந்த போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் வந்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், ஓபிஎஸ் அணியினருக்கும் மோதல் ஏற்பட்டது.
அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் முக்கிய பொருட்களை ஓபிஎஸ் தரப்பு திருடிச் சென்றுவிட்டதாக,
அதிமுக எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சொத்து ஆவணங்கள், ஆர்.சி புத்தகங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை போலீசாரிடம் பன்னீர்செல்வம் தரப்பினர் ஒப்படைத்தனர்.
இந்த பொருட்களை எல்லாம் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11ஆவது நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த பொருட்களை எல்லாம் கேட்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்து, அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மனுதாரர் சிவி சண்முகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
பிரியா
“கமலாலயத்துக்கு பதில் ராஜ் பவன்” : ஆளுநரை விமர்சித்த தங்கம் தென்னரசு
“இதற்காகவா பதக்கம் வென்றோம்” – வீராங்கனைகள் கண்ணீர்! டெல்லியில் நடப்பது என்ன?