“அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்து இன்றுடன் 41 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 3) சென்னைப் பசுமைவழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற சமயத்தில் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்,
குண்டர்கள், ரவுடிகள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்போடு அலுவலகத்துக்குள் உள்ளே சென்று பொருட்களை சூறையாடினர்.
இதுதொடர்பாக நாங்கள் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தோம். ஆனால் அது தொடர்பாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அவ்வரசே அதிமுக அலுவலகத்துக்கு சீலையும் வைத்தது.
அதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடுத்தோம். அந்த வழக்கின் தீர்ப்பிலே சென்னை உயர்நீதிமன்றம் எங்களுக்கு அதிமுக அலுவலக சாவியைத் தந்தது.
பின்னர், அந்த அலுவலகத்தை நாங்கள் திறந்துபார்த்தபோது, முழுமையாகச் சூறையாடப்பட்டிருந்தது.
அனைத்து அறைகளும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஆவணங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக நானே ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் அந்தப் புகாரை பதிவுசெய்யவில்லை.
இதுதொடர்பாக காவல் துறை தலைவர், உள்துறைச் செயலாளரிடம் மனு அளித்தோம்.
அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
இதற்கு முழுக் காரணம் ஆளும் திமுகதான். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரத்தில் துணையிருந்தது தமிழக காவல் துறைதான்.
அதனால் காவல் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 53 நாட்கள் ஆகின்றன.
இது தொடர்பாக காவல் துறையில் நான் கொடுத்த புகாரும் இன்றுடன் 41 நாட்கள் ஆகின்றன. தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி 21 நாட்கள் ஆகின்றன.
ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தை இதுவரை காவல் துறை அதிகாரிகள் நேரில் சென்றுகூடப் பார்க்கவில்லை” என்றார்.
ஜெ.பிரகாஷ்
தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும்