அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடந்த விவகாரம் குறித்து இன்று (ஏப்ரல் 20) சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடந்த நிலையில், மறுபக்கம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்றார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அலுவலகத்துக்குள் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச் சென்றதாக பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்குப்பதியப்பட்டது.
இந்தச்சூழலில் இன்று (ஏப்ரல் 20) தமிழக சட்டப்பேரவையில் காவல்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி.
அதிமுக அலுவலகத்தைச் சிலர் திட்டமிட்டுத் தாக்க முயன்றனர். உரிய பாதுகாப்பு வழங்கக் கேட்டு காவல்துறையில் புகார் அளித்தோம்.
ஆனால் காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை” எனக் கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், “அன்றைய தினம் யார் அத்துமீறியது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது போலீசாரின் பொறுப்பு.
யார் வெறியாட்டம் ஆடினார்கள் என தனி மேடை அமைத்துப் பேச தயாராக இருக்கிறேன்” என கூறினார்.
அப்போது இது உட்கட்சி விவகாரம் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ அதிமுக அலுவலகத்துக்கு வெளியே நடந்த சம்பவங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுத்தோம். அலுவலகத்துக்குள் நடந்த சம்பவங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடக்கிறது. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என விளக்கமளித்தார்.
பிரியா
இரட்டை இலை : கர்நாடக தேர்தல் அதிகாரிக்குச் சென்ற முக்கிய கடிதம்!
“அதிமுக தலைமையை தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள்”: மருது அழகுராஜ்