வைஃபை ஆன் செய்ததும் சட்டமன்றத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி-பன்னீர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான வாக்குவாதக் காட்சிகள் வந்து விழுந்தன. அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பிய நிலையில் இன்று (மார்ச் 23) அந்த சட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக, பாஜக, பாமக என ஆளுங்கட்சியின் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் இதை ஆதரித்தன. அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய நிலையில், அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது கையை உயர்த்தி, தான் பேச சபாநாயகரிடம் வாய்ப்பு கேட்டார். சபாநாயகரும் அனுமதி அளித்தார்.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ’அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறேன்’ என்று கூறினார். இதைக் கேட்டதும் அவர் அருகே அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டென கோபம் வந்தது.
உடனடியாக எழுந்து, ‘ஒரு கட்சிக்கு ஒருவர் என்றுதான் அனுமதி வழங்கினீர்கள். அதிமுக என்பது இங்கே எங்களது அணிதான். நான் தான் எதிர்க்கட்சித் தலைவர். இந்த நிலையில் தளவாய் சுந்தரம் பேசிய பிறகு இன்னொருவருக்கு பேச அனுமதி வழங்குவது என்ன நியாயம்? குழப்பத்தை உண்டுபண்ணுகிறீர்கள்’ என்று சபாநாயகரைப் பார்த்து கேட்டார்.
எடப்பாடியின் கோபமான கேள்விக்கு சபாநாயகர், ‘அவர் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் இது முக்கியமான மசோதா என்ற அடிப்படையில் வாய்ப்பு வழங்கினேன். அவர் கருத்தை சொன்னார். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்’ என்று பதிலளித்தார்.
அப்போது எடப்பாடி ஆதரவாளர்களான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சடக்கென எழுந்து பன்னீருக்கு எதிராக முழக்கமிட்டனர். அதற்குள் ஓ.பன்னீரின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எழுந்து, பன்னீருக்கு ஆதரவாக கைகளை உயர்த்தி கோஷமிட்டார்.
ஒருகட்டத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்டோர் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை நோக்கி சரமாரியாக வார்த்தைகளை வீசினர். சிலர் கைகளையும் ஓங்கினார்கள். இவற்றை அருகே இருந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தி அமரவைத்தார்.
ஓ.பன்னீர்செல்வமும் மனோஜ் பாண்டியனின் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தார். கே.பி.முனுசாமி தடுக்கவில்லை என்றால் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் இடையே ரசாபாசம் நிகழ்ந்திருக்கும் என்கிறார்கள் சக சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த நிலையில் பன்னீரை பேச அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டமன்றம் முடிந்த நிலையில் பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொறடா வேலுமணி ஆகியோரோடு முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார் கே.பி,முனுசாமி. அப்போது, ‘இன்றைக்கு சட்டமன்றத்தில் அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டியது. நல்லவேளையாக தவிர்க்கப்பட்டது.
பன்னீர்செல்வத்தின் மேல் ஆளுங்கட்சி சாஃப்ட் கார்னராக உள்ளது. அதனால்தான் அவர் பேசுவதற்கு அனுமதிக்கப்படுகிறார். இந்த நிலையில் இன்று நான் தடுக்கவில்லை என்றால் மனோஜ் பாண்டியன் மீது நம் எம்.எல்.ஏ.க்கள் கை வைத்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டிருந்தால் அதையே காரணமாக வைத்து நமது எம்.எல்.ஏ.க்கள் சிலர் சஸ்பெண்ட், தகுதி நீக்கம் என நடவடிக்கைக்கு ஆளாகும் அபாயம் உண்டாகியிருக்கும்.
பன்னீரிடம் அவர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், அய்யப்பன் என்று 4 பேர் மட்டுமே இருந்தாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதிக எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் நாம் உணர்ச்சிவசப்படுவதால் நமக்குத்தான் ஆபத்து. இதை நாம் உணரவேண்டும். திமுகவிடம் எச்சரிக்கையாக இருப்பதை விட சட்டமன்ற நாட்களில் பன்னீர் செல்வம் தரப்பிடம் நாம் நீக்கு போக்காக நடந்துகொள்ள வேண்டும். அவர்களை எதிர்த்து வரம்பு மீறக் கூடாது’ என்று சீரியசாக தெரிவித்திருக்கிறார்.
உடனடியாக எடப்பாடி பழனிசாமியும் வேலுமணி மூலம் இந்த மெசேஜை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்மொழியாக தெரிவிக்கச் சொல்லியுள்ளார். அதன்படியே வேலுமணியும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு, ’சட்டமன்றத்தில் அடக்கி வாசியுங்கள்’ என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததும் அவர்கள் நீதிமன்றத்தில் போராடியதும் இப்போது நினைவுக்கு வருகிறது” என்று இந்த மெசேஜுக்கு ரிப்ளை கொடுத்தது ஃபேஸ்புக் மெசஞ்சர்.
லியோ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ!
ஹிண்டன்பெர்க் வைத்த செக்…மாட்டிக்கொண்ட ஜாக் டோர்சி