பாஜகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ-கள் இன்று (பிப்ரவரி 27) மதியம் 2:15 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார்கள் என்று அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜக-வில் இணைந்து தமிழ்நாட்டு அரசியலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் பல கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு பாஜகவில் இணைவார்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால், கோவையைச் சேர்ந்த தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று (பிப்ரவரி 26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
அந்த விடுதியின் முன்பு கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் வந்ததை செய்தியாளர்கள் பார்த்துவிட்டு, அவரை செய்தியாளர்கள் அணுகியபோது, “வழக்கமாக இந்த பக்கம் நான் டீ குடிக்க வருவேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அதிமுகவில் இருந்தோ, திமுகவில் இருந்தோ முக்கிய நிர்வாகிகள் பலரை பாஜகவில் சேர்க்கும் முயற்சி நடப்பதாக ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், ”பாஜக எம்.எல்.ஏ-கள் இரண்டு பேர் அதிமுகவில் இணையப் போகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
அம்மன் அர்ஜூனன் சொல்வது உண்மையெனில் யார் அந்த இரண்டு பேர் என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. பாஜக சார்பாக தமிழ்நாட்டில் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய நான்கு பேர் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற சரஸ்வதி எம்.எல்.ஏ, அதிமுகவில் இணையப் போகிறாரா என்று ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடத் தொடங்கிவிட்டன. இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி டெல்லி தூது – பாஜகவை உடைக்க உத்தரவிட்ட எடப்பாடி என்ற தலைப்பில், மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகன் ஆற்றல் அஷோக் குமார் ஏற்கனவே பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இவர் தமிழ்நாடு மாநில ஓபிசி அணியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர்.
இவரை அதிமுகவிற்கு கொண்டுவந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் அதிமுகவின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம். எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய கே.வி.ராமலிங்கம், “மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி கூட விரைவில் அதிமுகவிற்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நான் அவரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்” என்று முன்பே கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் செய்தியாளர் சந்திப்பில், இரண்டு பாஜக எம்.எல்.ஏ-கள் அதிமுகவில் இணையப் போவதாக பேசியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஒருவேளை அவர் சொல்வது உண்மையென்றால் மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி அதிமுகவில் இணையவிருக்கிறாரா என்ற கேள்வியையும், இன்னொருபுறம் யார் அந்த மற்றொரு எம்.எல்.ஏ என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாசனை விமர்சிக்க வேண்டாம் -அதிமுகவினருக்கு எடப்பாடி உத்தரவு!
நாடாளுமன்ற தேர்தலில் தவாக தனித்துப் போட்டியா?