ஈரோட்டில் அனுமதியின்றி அதிமுக கூட்டம் நடைபெற்றதால் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குச் சீல் வைத்துள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (பிப்ரவரி 9) ஈரோடு வைராபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து தேர்தல் பணிகளைக் கவனித்து வந்துள்ளனர்.
குறிப்பாக இன்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறவிருந்தது. இந்த கூட்டத்திற்காக ஆட்களை திரட்டுவதற்காகப் பணப்பட்டுவாடா செய்வதாகத் தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் சென்றுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், உதவி தேர்தல் அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் அதிமுகவினர் இருந்த திருமண மண்டபத்திற்கு ஆய்வு செய்ய வந்தனர்.
அப்போது தேர்தல் அதிகாரிகளை மண்டபத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் அங்கிருந்த அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுமதி பெறாமல் கூட்டம் நடத்துவது தவறு என்று பறக்கும் படை அதிகாரிகள் மண்டபத்தில் இருந்த அதிமுகவினரை வெளியேற்றியுள்ளனர்.
தொடர்ந்து திருமண மண்டபத்திற்குச் சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பின்னர் தனியார் திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் ஈரோடு தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் இதே மண்டபத்தில் அதிமுக சார்பில் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தகவல் அறிந்து வந்த தேர்தல் அதிகாரிகள், அனுமதி பெறாமல் இது போன்ற கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது தவறு என்று கூறியிருந்தனர்.
அப்போது, இனி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யும் போது அனுமதி பெறப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதோடு, தகவல் அறிந்து வந்த அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மோனிஷா
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்!
“8 கோடி மக்கள் பாராட்டும் அரசாக அமைய வேண்டும்”: ஸ்டாலின்