அதிமுக ஒன்று சேராததே ஈரோடு கிழக்கு தொகுதியில் தோல்விக்கான காரணம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இன்று (மார்ச் 2 ) செய்தியாளர்களை சந்தித்த அவர், “திரிபுராவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி சரித்திர வெற்றி. நாகாலாந்தில் பல்வேறு பிரச்சினைகள் நிறைந்த மாநிலம். பாஜக அந்தப் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக பாஜக கூட்டணிக்கு அங்கும் வெற்றி கிடைத்துள்ளது.
மேகாலயாவைப் பொறுத்தவரை, பாஜக தனித்துப் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜகவின் கூட்டணி இல்லாமல் அங்கு ஆட்சியமைக்க முடியாது என்ற கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த வெற்றிக்கு ஒரே காரணம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, எப்போதுமே தேர்தலின் தீர்ப்பு வந்தபிறகு, மக்கள் கொடுத்திருக்கக்கூடிய செய்தியை தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அது அரசியல் ஜனநாயகத்தில் முக்கியமானது. அப்படித்தான் பாஜக எல்லா தேர்தல்களையும் பார்க்கிறது. ஏனென்றால் மக்கள் ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக அவர்களால் முடிந்த அளவிற்கு பாடுபட்டார்கள் ” என்றார்.
மேலும், ”அதிமுக ஒன்றுசேராததே தோல்விக்கு காரணம். தேர்தலில் யார் நிற்க வேண்டும்? யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்? என அதிமுகவில் தேர்தலுக்கு முன்பே பிரச்சனை எழுந்தது.
கட்சி சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேட்சையாக போட்டியிட வேண்டுமா என்பதில் குழப்பம் நிலவியது. இதை சொன்னதற்காக சிலர் எங்கள் மீது கோபப்பட்டார்கள்” என எடப்பாடி பழனிச்சாமி மீது அண்ணாமலை விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
3வது டெஸ்ட்: 2வது இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா
45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!