பணம் கேட்டது உண்மை தான் என்றும் ஆனால் அதை எதற்காக கேட்டேன் என்று கே.பி.முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ரூ 1 கோடி பணம் கேட்டதாக கூறி ஆடியோ ஒன்றை இன்று (பிப்ரவரி 16 ) கிரீன்ஸ்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த போது வெளியிட்டார்.
அந்த ஆடியோவில் கிருஷ்ணமூர்த்தி முதலில் 50 லட்சத்தை ஏற்பாடு செய்துவிட்டேன். அதை தற்போது கொடுத்துவிடுகிறேன். மீதி 50 லட்சம் பணத்தை மாலைக்குள் ரெடி செய்து கொடுத்து விடுகிறேன்.
முதலில் 50 லட்சம் பணத்தை எப்படி கொடுப்பது என கே.பி.முனுசாமியிடம் கேட்கிறார். அதற்கு அவரோ என் மகனை அனுப்புகிறேன், கொடுத்துனுப்புங்கள் என்கிறார்.
அந்த ஆடியோ குறித்து தற்போது கே.பி.முனுசாமி விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், ” ரூ 1 கோடி கேட்டேன் என்று சொல்கிறார். எப்போது கேட்டேன் என்று தேதியை வெளியிட முடியுமா?
ஓ.பன்னீர்செல்வத்துடன் நான் தொடர்ந்து பயணித்த போது கிருஷ்ணமூர்த்தியும் வருவார், என்னுடனும் பேசுவார். என்னிடம் நன்றாக பழகி கொண்டு இருந்தார்.
ஏதோ கருத்துகளை பரிமாறிக்கொண்டிருக்கும் நேரங்களில் இது போன்ற வார்த்தைகளை ஜோடித்து ஒரு குற்றச்சாட்டை இன்று கூறியிருக்கிறார்.
அதற்கான காரணம் என்னவென்றால், நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக அதிமுகவில் இனி பயணிக்க முடியாது. அவர் வெகுதூரம் சென்று விட்டார் என்று ஓ.பி.எஸ் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினேன்.
அதற்காக தான் ஓ.பி.எஸ் கிருஷ்ணமூர்த்தியை வைத்து இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது. நான் அரசியல் ரீதியாக பணத்தை விரும்புவனா என்பது அவர்களுக்கே தெரியும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நான் ரூ 1 கோடி பணம் கேட்டது உண்மைதான். ஆனால் எதற்காக கேட்டேன். அவர் என்னைவிட வயதில் சிறியவர். அதை சொன்னால் வெட்கக்கேடு.
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தேர்தல் செலவுக்கு கட்சி சார்பில் எல்லாருக்கும் பணம் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு மட்டும் பணம் கொடுக்கவே இல்லை.
அதனால் தேர்தல் செலவுக்கு எனக்கு தெரிந்தவர்களிடம் ரூ 1 கோடி கேட்டேன். அது போல்தான் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன்.
கடனாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் பணம் கேட்டேன். கடன் கேட்ட பணத்தை நான் லஞ்சம் கேட்டதாக கூறுவது கேவலம். என்னை பற்றி பன்னீர் செல்வத்திற்கு நன்றாக தெரியும்.
கடனாக கேட்ட பணத்தை மனசாட்சியே இல்லாமல் இப்போது வெளியிடுகிறாரே கிருஷ்ணமூர்த்தி. நான் பேசிய ஆடியோதான், நான் மறுக்கவில்லை.
இதுவரை எத்தனையோ பேருக்கு பெரிய பெரிய பதவிகளை பெற்று கொடுத்தேன், ஒரு ரூபாய் கூட பெற்றதே இல்லை” என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
எஸ்.எஸ்.சி இணையதளம் முடக்கம்: அதிர்ச்சியில் தேர்வர்கள் – அவகாசம் நீட்டிக்கப்படுமா?
தென்காசி வழக்கு: கிருத்திகா வைத்த சஸ்பென்ஸ்! ஏமாற்றத்துடன் சென்ற காதல் கணவர்!