பன்னீர் தரப்பை போல நாங்கள் பந்திக்கு முந்திக் கொள்ள மாட்டோம் என்று ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாதது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டம்
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஊதிய ஒப்பந்த முடிவை விரைவாக எடுக்க வலியுறுத்தி சென்னை பல்லவன் சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையினர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ,விஜயபாஸ்கர், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
தேர்தல் வாக்குறுதிகள் என்னானது?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த அரசு செவிடன் காதில் சங்கு ஊதுவது போல உள்ளது. நாங்கள் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அந்த நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம்” என்றார்.
பந்திக்கு முந்த மாட்டோம்
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் பழனிசாமி தரப்பு பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு அது ஒன்றும் கட்டாயம் இல்லை, நாங்கள் ஓபிஎஸ் போல பந்திக்கு முந்திக்கொள்ள மாட்டோம் என்று விமர்சனம் செய்தார்.
கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக கூடாது
மேலும் அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சபாநாயகர் கூறுவது தேவையற்ற பேச்சு என்று கூறிய ஜெயக்குமார், சபாநாயகர் அப்பாவு தன் பணியை மட்டும் பார்க்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்பட கூடாது என்றார். ஓபிஎஸ் உடன் 80%தொண்டர்கள் இல்லை . வெறும் 80 தொண்டர்கள் தான் உள்ளனர் என்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டும் என்றார்.
மனுவை ஏற்கவேண்டும்
எனவே அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தை துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை துணை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஜெயக்குமார் , அப்போதுதான் அவர் மாண்புமிகு சபாநாயகர் இல்லையென்றால் மாண்பில்லா சபாநாயகர் என்று அழைக்கப்படுவார். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. ஏனென்றால் திமுக தான் மெஜாரிட்டியாக உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
அதிமுக பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. முதலில் அவர்கள் ஒரு நிலைப்பாடு எடுக்கட்டும், பின்னர் அதிமுக நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்று தெரிவித்தார்.
கலை.ரா