அதிமுக பெரிய கட்சிதான், ஆனால் தேர்தல் முகமாக பிரதமர் மோடி இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இந்நிலையில் இன்று(ஏப்ரல் 30) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அமித் ஷா, நட்டாவுடனான சந்திப்பை பற்றி பேசினார்.
“நம்முடைய இலக்கு 2024தேர்தல். திமுக ஆட்சி மீது மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்று பார்க்கிறோம். எனவே 2024தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
புதுச்சேரியிலும் வெற்றி பெற வேண்டும். 40க்கு 40என்ற இலக்கோடு இந்த முறை 400 எம்.பி.க்களுடன் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வேண்டும்.
இந்த கருத்தை நானும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேசிய தலைமையிடம் முன்வைத்தோம்.
இன்னும் தேர்தலுக்குக் காலம் இருக்கிறது. எனவே தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்த பேச்சுவார்த்தை இப்போதைக்கு இல்லை.
தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக இருக்கிற மனநிலையை வாக்குகளாக மாற்ற வேண்டும். 2024 தேர்தல் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான தேர்தல். பிரதமர் வேட்பாளரான மோடியின் முகத்தோடு இந்த தேர்தல் நடைபெற உள்ளது.
தேசிய முற்போக்கு கூட்டணியில் யார் இடம் பெறுவது, யார் இடம் பெறக்கூடாது என்பதை முடிவெடுக்க மாநில தலைவருக்கு உரிமை இல்லை. தேசிய தலைமைக்குத் தான் உரிமை இருக்கிறது.
தலைமை கூட்டணி என்று ஒரு பேச்சுக்கு இடமில்லை. அதிமுக பெரிய கட்சி தான். ஆனால் இந்த கூட்டணியின் முகம் என்பது பிரதமர் மோடிதான்” என்று கூறினார்.
பிரியா