எடப்பாடி வசம் அதிமுக : ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

Published On:

| By Aara

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23)  தீர்ப்பளித்துள்ளது.

‘இதை ஒட்டி தமிழகம் முழுதும் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேநேரம் இந்தத் தீர்ப்பு  அதிமுகவுக்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால்  அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம்  வந்திருக்கும் நிலையில்…  இந்தத் தீர்ப்பு குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் என்ன நினைக்கிறார் என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதுகுறித்து திமுக மேலிட வட்டாரங்களில் விசாரித்தபோது,  “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் மு.க.ஸ்டாலின் தன் கையில் இருக்கும் செல்போன் மூலமாகவே தீர்ப்பை பற்றி அறிந்துகொண்டார்.

தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘இந்தத் தீர்ப்பு  எதிர்பார்த்ததுதான். ஏற்கனவே எடப்பாடிக்கு சாதகமாதான் தீர்ப்பு வரும்னு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை சுட்டிக் காட்டி என்கிட்ட டெல்லியில இருந்து சொன்னாங்க.

அதேநேரம் இந்தத் தீர்ப்பு  ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு  சில நாட்கள் முன்னாடி வந்திருக்கிறதை நாம கவனிக்கணும். தேர்தல் பிரச்சார முடிய இன்னிக்கு சேர்த்து மூணு நாள்தான் இருக்கு. இன்னும் கவனமா இருக்கணும்’ என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்” என்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் பி டீம் ஆக செயல்படுகிறார் என்று  எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் வெளிப்படையாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்கள்.

அதை உறுதிப்படுத்துவது போல பன்னீர்செல்வமும் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் உள்ளிட்ட  பல்வேறு விவகாரங்களில் திமுகவுக்கு அனுசரனையாகவே நடந்து வந்தார். கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நடந்த பன்னீர் மாசெக்கள் கூட்டத்தில் கூட, ‘திமுகவுக்கு எதிராக பாஜகவுக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம்’ என்று தனது நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில்தான் பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி  இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேந்தன்

பொதுக்குழு செல்லும் என்பது ’தெய்வத்தின் வாக்கு!’ – ஆர்.பி உதயகுமார்

எடப்பாடிக்கு பாலாபிஷேகம்: வெற்றி கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share