கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் குறித்து விவாதிக்க கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டும், சட்டசபையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவருடன் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள அதிமுக நிர்வாகிகளுடன் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்களை சந்திக்காதது ஏன்?
அதில், ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?
கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? பயமா?” என முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ள நிலையில், தற்போது போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Share market: 5ஜி ஏலம்… பங்குச் சந்தையில் எதிரொலி!
திருமணமான பெண்களை பணியமர்த்த மறுக்கும் ஃபாக்ஸ்கான்: மத்திய அரசு நோட்டீஸ்