இடைத்தேர்தல் பூகம்பத்தில் அதிமுக மறைந்துவிடும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

அரசியல்

ஈரோடு இடைத்தேர்தல் பூகம்பத்தில் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ்அரசியல் கட்சியினர்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 10) ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சராக இருந்த போது எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சர்களும், அவரது இயக்கத்தினரும் செய்திருக்கக் கூடிய துரோகங்களைப் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.

டெல்லியில் பிரதமராக இருக்கக்கூடிய மோடியிடத்தில் தங்களை மட்டுமல்ல, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை காத்த இயக்கத்தையே அடிமை சாசனமாக எழுதிக் கொடுத்து அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்குத் துரோகம் விளைவித்தவர்கள் அவர்கள்.

உதய் மின் திட்ட விவகாரத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு உதய் மின் திட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டை இணைத்ததால் மின்சார வாரியத்திற்கு ஏற்பட்ட கேடுகளை நீங்கள் அறிவீர்கள்.

காவிரி பிரச்சனைகளில் அவர்கள் செய்த துரோகங்கள். மேகதாது விவகாரத்தில் பிரதமரை சந்திக்க மாட்டேன் என்ற பிடிவாதம் என்று தொடர்ச்சியாகச் சொல்ல முடியும். 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்த போது அதை ஆதரித்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி.

ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு என்ன அடிப்படை நியாயம் உங்களிடத்தில் இருக்கின்றது. குட்கா போதைப் பொருளைப் பற்றிப் பேசுகிறார். சட்டம் ஒழுங்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இன்றைக்கு செம்மையாக இருக்கிறது.

ஆனால் அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் பிரச்சனையின் போது, மக்களைச் சுட்டுக் கொன்ற போது இவ்வளவு பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடக்கிறதே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால் நான் டிவியிலே பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்லக் கூடிய அளவிற்குத் தான் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருந்தது.

தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை மூடி பார்க்க முனைந்தது யார் என்பதை மனசாட்சியோடு அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஊழல்களின் மொத்த உறைவிடமாக, தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்பவர்களில் முதன்மையிடமாக, நம் நலன்களை அடகு வைப்பதில் ஆர்வம் காட்டக் கூடியவர்களாக அதிமுகவினர் இருந்து விட்டு இன்றைக்கு ஈரோடு தேர்தலில் வாக்குகள் கேட்டு வந்திருக்கிறார்கள்.

நீங்கள் எத்தனை முகமூடிகளைப் போட்டுக் கொண்டு ஈரோடு தேர்தல் களத்திற்கு வந்தாலும் ஈரோட்டு பூகம்பத்தில் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் மறையும் என்பது உறுதி.

நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகக் களம் காணக்கூடிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி அதிமுகவிற்கு தக்க பாடத்தைப் புகட்டும்” என்றார்.

மோனிஷா

மோடி ஆவணப்பட வழக்கு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

முதல் படத்திலேயே அதிர்ச்சி கொடுத்த குட்டி நயன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *