அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்று அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு இன்று (ஜூலை 29) விசாரணைக்கு வந்தது.
“இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை எத்தனை சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 11ம் தேதி நடந்தது என்ன? இந்த வழக்கில் தற்போது சமரசத்துக்கு வாய்ப்புள்ளதா?” என நீதிபதிகள் கேட்டனர். இதனால் உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”அதிமுக பொதுக்குழு விவகாரத்தை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கே விசாரணைக்காக திரும்ப அனுப்புகிறோம்” என உத்தரவிட்டனர்.

மிகப்பெரிய வெற்றி
இந்த நிலையில் இதுகுறித்து இன்று (ஜூலை 29) டெல்லியில் பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் இன்பதுரை, “எதிர்தரப்பினர் இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பழைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, நீதியரசர் அதற்கு மறுப்பு தெரிவித்து தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என்றார். அதாவது, இன்று என்ன நிலையோ, அது நீடிக்கும் என்றார். அப்படி இல்லையெனில் வழக்கை வாபஸ் பெறுங்கள் என எதிர்தரப்பிடம் தெரிவித்தார். இந்த வழக்கைப் பொறுத்தவரை ஸ்டேட்டஸ் கோ என்ற பதத்தில் சொல்கிறதுபோல இன்றைய நிலையே தொடரும். மொத்தத்தில் ஒரு நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது” என்றார்.
அவரைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளரும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன், “ஸ்டேட்டஸ் கோ என்று சொன்னால், இன்றைய நிலைமை என்னவோ, அந்த நிலைமை அப்படியே இருக்க வேண்டும். அதை மீறி எந்த முடிவும் அவர்கள் எடுக்க முடியாது. பொதுச் செயலாளர் தேர்தல் வர இருக்கிறது. அது, நடைபெறாது. மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது; எந்த நியமனங்களையும் செய்ய முடியாது. எந்த நீக்கங்களையும் செய்ய முடியாது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவினை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற உத்தரவைப் பார்க்கும்போது அது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்றார்.
ஜெ.பிரகாஷ்