அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 10) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜூலை 10ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இவ்வழக்கு உயர்நீதிமன்றத்துக்கே அனுப்பப்பட்டது. முன்னர், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் வலியுறுத்தலை அடுத்து விலகினார். இந்த நிலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 10) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு. பொதுக்குழுவை கூட்டக் கோரி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அழைப்பு விடுக்க முடியும். அவர்கள் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். இது சம்பந்தமான விதிகளை அவர்கள் பின்பற்றவில்லை.
கட்சி விதிகளின்படி பதவிகள் காலியானால், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பொருளாளரும், தலைமைக் கழகச் செயலாளரும் அப்பதவிகளுக்கான பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் தொடர்பான விதிகள் திருத்தத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிட்டால், இருபதவிகளும் காலியாகிவிடும் என்றால், அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும்தானே?

1972 முதல் பொதுச்செயலாளர்கள் அடிப்படை உறுப்பினர்களால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியினரின் விருப்பத்தை ஏற்று கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருப்பார் என 2017ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ‘இரட்டை தலைமையை ரத்து செய்து பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது, இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வது சம்பந்தமாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவுக்கு நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது உள்ளிட்டவை கட்சி விதிகளுக்கு விரோதமானது’ “ என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில், “நிகழ்ச்சி நிரல் வெளியிடுவதில்லை என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்துள்ளது. ஒருங்கிணைப்பாள்ர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி எந்தக் கூட்டமும் கூட்டக் கூடாது என்பதே எங்கள் வழக்கின் முதல் கோரிக்கை. சிறப்புக்கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தால் மட்டும் 30 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும். ஆனால், இந்தப் பொதுக்குழு கூட்டம் என்பது சிறப்புக் கூட்டம் அல்ல” என அவர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இது தொடர்பான வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெ.பிரகாஷ்
இரட்டை இலையை எம்.ஜி.ஆருக்கு அடையாளம் காட்டிய மாயத் தேவர் காலமானார்!