அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான சசிகலாவின் வழக்கை மார்ச் 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் ஆனார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்ற பிறகு 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில் தன்னை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுவை ஏற்று சசிகலாவின் மனுவை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் செம்மலை, வழக்கின் மதிப்பிற்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு சசிகலா தரப்பில், பதிவுத் துறையில் சரி பார்த்த பிறகுதான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் செம்மலையின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்தச்சூழலில் இன்று (மார்ச் 20) வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் வரும் மார்ச் 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மார்ச் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அடுத்த நாளே சசிகலாவின் வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது.
மார்ச் 26ஆம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரியா
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா !
RCB ஏன் கோப்பையை வெல்ல முடியவில்லை: கிறிஸ் கெய்ல் சொன்ன காரணம்!