“விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும்” என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 12) நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் பன்னீரிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை, தர்மம் வென்றிருக்கிறது. உண்மை, தர்மம், நீதி மூன்றும் எங்களிடம் இருக்கிறது. நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது.
இடைக்கால பொதுச்செயலாளராக கழகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும்” என்றவரிடம்,
“அதிமுக அலுவலகத்தில் பொருட்கள் காணாமல் போக வாய்ப்பில்லை என புகழேந்தி கூறியிருக்கிறாரே” என்று கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர், “ அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் புகழேந்தி. அவர், ஏற்கெனவே அமமுகவில் இருந்துவந்துதான் அதிமுகவில் சேர்ந்தார். அவர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட காரணத்தால், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
அதிமுகவிற்கும் புகழேந்திக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர், பெரிய ஆளே கிடையாது. ஊடகமும், பத்திரிகையும்தான் அவரைப் பெரிய ஆளாக காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
2021ல் சட்டமன்றத் தேர்தலில் ஓசூரில் நோட்டோ ஓட்டுக்களைவிட புகழேந்தி வாங்கிய ஓட்டுகள் குறைவு. அப்படிப்பட்டவர் இந்த ஊடகத்தையும் பத்திரிகையையும் பயன்படுத்தி, தாம் ஒரு பெரிய ஆளாகவும், அரசியல்வாதியாகவும், மக்கள் செல்வாக்கு உள்ளவராகவும் ஒரு தோற்றத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

ஆகவே, அவர் மக்கள் செல்வாக்கு இழந்த ஒரு நபர். அவரைப் பற்றிப் பேசுவதே சரியில்லை என்றே நினைக்கிறேன்.
புகழேந்தியிடம், நீங்கள் கருத்து வாங்குவது ஊடகத்துக்கே கேவலமாக இருக்கிறது. அவர் கொடுக்கிறார் என்றால், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? தகுதியான ஒரு நபரை விவாத மேடையில் அமரவையுங்கள்.
உங்களுக்கு பரபரப்பு செய்தி வேண்டும் என்பதற்காக வீதியில் போகிற யாரை வேண்டுமானாலும் அமரவைத்து கேட்டீர்கள் என்றால், இப்படிப்பட்ட செய்திதான் கிடைக்கும். ஜெயலலிதா, அவருக்கு, கழகச் செயலாளர் பொறுப்பு வழங்கினார். ஆனால், ஒரு வழியாக பெங்களூருவில் கட்சியே இல்லாமல் ஆக்கிவிட்டார், புகழேந்தி. அவருக்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்” எனக் கடுமையாகப் பதிலளித்தார்.
தொடர்ந்து, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்களா” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதிமுகவில் மீண்டும் கட்சிக்குள் யாரைச் சேர்ப்பது என்பது தலைமைக் கழகம்தான் முடிவுசெய்யும். பொதுக்குழுவில் இருந்து விலக்கப்பட்ட நபர்கள் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை.
நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும்போது இணைவதற்கான சுமுகச் சூழல் எப்படி அமையும்? நீதிமன்றம் செல்பவர்களுக்கு இந்தக் கட்சியில் எப்படி இடம் கிடைக்கும்” எனப் பதிலளித்தார்.
இறுதியில், “முதல்வர் சொன்னபடி உங்கள் தொகுதியில் 10 கோரிக்கைகளை அளித்துவிட்டீரா” எனக் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “முதல்வரின் கோரிக்கையின்படி நானும் என் தொகுதிக்குப்பட்ட 10 பிரச்சினைகளை அளித்திருக்கிறேன்.
எப்படிச் செய்கிறார் என்று பார்ப்போம். இது, எல்லாம் விளம்பரம்தான். நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை அவர்கள் நிறைவேற்றவில்லை. சட்டமன்றத் தொகுதி மேம்பாடு நிதியே ஒழுங்காய் தருவதில்லை.
2 ஆண்டுக்கால கொரோனா தொற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீளாத நிலையில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மின் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!