கழக சட்டவிதிகளின் படி எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிமுக தலைமை கழகம் இன்று (மார்ச் 28) அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்தான அறிவிப்பு மார்ச் 17 ஆம் தேதி வெளியானது.
மார்ச் 18 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல், 19 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள், 20 வேட்பு மனு பரிசீலனை, 21 வேட்பு மனு திரும்ப பெறுதல், 26 வாக்குப்பதிவு நாள், 27 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அதிமுக தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட மார்ச் 18 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இதனை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தார்.
இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 28 ) தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அதிமுக பொதுச்செயலாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதி – 20 (அ) பிரிவு – 2ன் படியும்:
கழக சட்ட திட்ட விதி -20 அ: பிரிவு -1, (a), (b), (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படியும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக வின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக கழக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
என தேர்தல் ஆணையர்களான கழக துணை பொதுச்செயலாளரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாருமான நத்தம் விசுவநாதன்,
கழக தேர்தல் பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரால் இன்று அறிவிக்கப்பட்டு,
அதற்கான வெற்றி படிவத்தை கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமியிடம் வழங்கினார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ்: ராகுல் அளித்த பதில்!
“தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி” : பொதுச்செயலாளர் எடப்பாடி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி