“கட்சித் தேர்தலில் நீதிமன்றம் தலையிட முடியாது”: எடப்பாடி தரப்பு வாதம்!

Published On:

| By Selvam

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் கட்சித் தேர்தலில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதத்தை முன்வைத்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

ஓபிஎஸ் அணி தரப்பில் வழக்கறிஞர்கள், பி.எஸ்.ராமன், ஸ்ரீ ராம், மணி சங்கர், ராஜ லெட்சுமி ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தபோது,

“பொதுக்குழு தீர்மான வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுவிட்டு பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தது தவறு. இன்று மாலையே பொதுச்செயலாளர் தேர்வானதாக அறிவிக்க வாய்ப்புள்ளது.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் 2026 வரை உள்ளது. 2017 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக கட்சி அறிவித்தது.

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்கின்றன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே தேர்தல் ஆணையம் கடிதங்களை அனுப்புகிறது.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதியை திருத்தியுள்ளனர். அவசர கதியில் அறிவிக்கப்பட்ட பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று வாதத்தை முன்வைத்தனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டதால் நீதிமன்றம் தலையிடக்கூடாது. மூன்று பேருக்கும் வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை. அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் கூட இல்லை. அவர்கள் ஏற்கனவே பொதுக்குழுவை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு சென்று தோற்று விட்டனர்.

பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை எதிர்த்து வேண்டுமானால் ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடரட்டும். பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றமோ உயர் நீதிமன்றமோ கூறவில்லை.

அதிமுக கட்சி விதிகளின்படி முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஈடுபடுகிறது.

அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே ஒற்றை தலைமை எடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் கற்பனை உலகத்தில் இருக்கின்றனர். கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. அதிமுக கட்சி விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம்” என்று வாதிட்டார்.

செல்வம்

சதுரகிரி கோவிலில் பக்தர்கள் தரிசனம்!சதுரகிரி கோவிலில் பக்தர்கள் தரிசனம்!

ஈக்வாடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 14 பேர் உயிரிழப்பு!

aiadmk general secretary election mhc order
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment