அவசர கதியில் அறிவிக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோரது வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இன்று மாலையுடன் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது.
இந்தநிலையில், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், “பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது நீதிமன்ற நடவடிக்கையை மீறும் செயல் மட்டுமல்லாமல் நீதிமன்ற கண்ணியத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் செயலாகும்.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது எக்காரணமும் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவிக்கு அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் அணி தரப்பில் வழக்கறிஞர்கள்,
பி.எஸ்.ராமன், ஸ்ரீ ராம், மணி சங்கர், ராஜ லெட்சுமி ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தபோது, “பொதுக்குழு தீர்மான வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுவிட்டு பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தது தவறு. இன்று மாலையே பொதுச்செயலாளர் தேர்வானதாக அறிவிக்க வாய்ப்புள்ளது.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் 2026 வரை உள்ளது.
2017-ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக கட்சி அறிவித்தது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்கின்றன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே தேர்தல் ஆணையம் கடிதங்களை அனுப்புகிறது.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதியை திருத்தியுள்ளனர். அவசர கதியில் அறிவிக்கப்பட்ட பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று வாதத்தை முன்வைத்தனர்.
செல்வம்
ஈக்வாடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 14 பேர் உயிரிழப்பு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!