டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உண்மையை மறைத்து பேசுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் விவகாரத்தில் இன்று (டிசம்பர் 9) சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி உள்ளிட்டோர் பதிலளித்தனர்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்” என்று கூறியிருந்தார்.
இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “யுபிஏ அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் யுபிஏ அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
என்டிஏ ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் தம்பிதுரை பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.
இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக எம்.பி.-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை ஸ்டாலின் ‘X’ வலைதளத்தில் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஆயிரம் கைகள் மறைத்தாலும்… சஸ்பெண்ட் குறித்து ஆதவ் அர்ஜூனா ரியாக்சன்!