அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, இன்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது.
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து, வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் நாங்கள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவில்லை என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தபோது, “சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த உத்தரவை எதிர்த்து எங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அதிமுக பொதுக்குழு செல்லும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும். பொதுக்குழுவை 4 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமல்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது. தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு எங்களிடம் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய போது, ஜூலை 11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு என்பது 95 சதவிகிதம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் எப்படி நாங்கள் தலையிட முடியும். இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பிரச்சனைகளை சிவில் நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளுங்கள்.
சிவில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த பிரச்சனைகளை முடிக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிடுகிறோம்.
இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விடுமுறை காலத்திற்கு பிறகு இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கிறோம்.
யாருக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது. விடுமுறைக்கு பின்பு நவம்பர் மாதம் 21-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஓபிஎஸ் தரப்பில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின்போது, நீதிமன்றம் எங்களுக்கு பொதுச்செயலாளர் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்த அனுமதி அளித்தபோதும், நாங்கள் தேர்தலை நடத்தவில்லை.
காரணம், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், நாங்கள் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்று தெரிவித்தோம். இதனையடுத்து இந்த வழக்கானது நவம்பர் மாதம் 21-ஆம் தேதி இறுதி விசாரணைக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு இந்த நிமிடம் வரையில் எங்களுக்கு எந்த தடையும் இல்லை. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தலை நடத்துவது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொது அறிவு உள்ள யாரும் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டார்கள்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
செல்வம்
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!
திமுக அமைச்சர்களை கடுமையாக சாடிய குஷ்பு