எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச்செயலாளராகத் தன்னை தேர்ந்தெடுத்ததையும் அங்கீகரிக்கக் கேட்டுத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி இருமுறை முறையிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம், அவரை பொதுச்செயலாளராக அங்கீகரித்து கடிதம் அனுப்பியது.
இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டாடி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், “தேர்தல் ஆணையம் 2010ஆம் ஆண்டு வெளியிட்ட விதிகளுக்குப் புறம்பாக, கழக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுக தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பு வரும் வரை அதிமுக விதிகளை மாற்றக்கூடாது.
எனவே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு வரும் ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 25ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
பிரியா
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி55 ராக்கெட்!
சூரத்தை தொடர்ந்து பாட்னா: மீண்டும் நீதிமன்றம் முன் நிற்கும் ராகுல்காந்தி