aiadmk general meeting in pollachi

அதிமுக பொதுக்கூட்டம்: காவல்துறைக்கு உத்தரவு!

அரசியல்

அதிமுக பொதுக்கூட்டத்திற்கு மாற்று இடத்தை வழங்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜனவரி 25 ஆம் ’மொழிப்போர் தியாகிகள் தினம்’ அனுசரிக்கப்படவுள்ளது.

மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி கோவை மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ”கடந்த ஆண்டு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஜனவரி 7 ஆம் தேதி மனு அளித்தோம்.

ஆனால், எங்கள் மனு மீது கோவை காவல்துறை தரப்பில் இருந்து இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை.

எனவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொள்ளும் இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதியளிக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (ஜனவரி 25) உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், ”பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் 30 ஆண்டுகளாக மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை” எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ”பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி ஜனவரி 6 ஆம் தேதியே திமுக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதிமுக சார்பில் அடுத்த நாளான ஜனவரி 7 ஆம் தேதி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த திமுகவிற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

மாற்று இடமாக பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி மஹால் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக விரும்பினால், அதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படும்” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல்லடம் சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி புதிய பொள்ளாச்சி கிழக்கு காவல்துறைக்கு விண்ணப்பம் அளிக்க அதிமுகவிற்கு உத்தரவிட்டார்.

அதிமுக பொதுக்கூட்டம் நடத்த மாற்று இடத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

மோனிஷா

கல்லால் அடித்த அமைச்சர் நாசர்: ஸ்டாலின் விழா ஏற்பாட்டில் அதிர்ச்சி!

‘சர்ச்சை மருத்துவர்’ ஷர்மிகாவுக்கு புது உத்தரவு பிறப்பித்த எம்.சி.ஐ!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *