அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதம் ஏப்ரல் 21-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷரீஃப் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணி சங்கர் ஆஜராகி, “அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நான்கு பேரை நீக்கியது சட்டவிரோதமானது.
கட்சி நிர்வாகியையோ உறுப்பினரையோ நீக்குவதற்கு ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் தான் அதிகாரம் உள்ளது. கட்சி விதிகளை பின்பற்றி எங்களை நீக்கவில்லை” என்று வாதத்தை முன்வைத்தார்.
மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, “உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக தெரிவிக்கவில்லை.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக தெரிவிக்கின்றனர். பொதுக்குழுவில் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர்” என்று வாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், “ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரையும் கட்சியிலிருந்து நீக்கியது இயற்கை நீதிக்கு முரணானது என்று கூறமுடியாது. எம்ஜிஆர் வகுத்த அதிமுக சட்டவிதிகளின் படிதான் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்தவழக்கின் விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
பாஜக பூஜ்யமாக வேண்டும்: நிதிஷ் சந்திப்புக்கு பின் பேசிய மம்தா
12 மணி நேர வேலை: “இன்று இரவிற்குள் திரும்ப பெறாவிட்டால் போராட்டம்”: சவுந்தரராஜன்