அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று (டிசம்பர் 26) அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணைய சட்ட விதிகளின் படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டமும், இரண்டு முறை செயற்குழு கூட்டமும் நடத்த வேண்டும். அதன்படி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை 10.35 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என 2,800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து இன்று காலை பொதுக்குழு நடைபெறும் வானகரம் நோக்கி புறப்படும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு அங்கீகாரம் மற்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்குவது, மழை,வெள்ள பாதிப்பு, எண்ணூர் எண்ணெய் கசிவு நிவாரணங்களை உயர்த்தி வழங்க வலியுறுத்துதல், திமுக அரசுக்கு எதிரான கண்டனம் தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அரசியல் அரங்கில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் கொரோனா: அதிக பாதிப்புக்குள்ளான மாநிலம் எது?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!