எடப்பாடி பழனிசாமிக்கு ராசியான வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்கூழு கூட்டம் இன்று (டிசம்பர் 15) நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளே செல்ல தனித்தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு அழைப்பிதழ், உறுப்பினர் கார்டுகள் வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் பெயர் முகவரியுடன் கையெழுத்து போட்ட பிறகு, பொதுக்குழு, செயற்குழு, சிறப்பு அழைப்பாளர்களுக்கு பேட்ஜ் கொடுக்கப்பட்டது.
எந்தசூழலிலும் அந்நியர்கள் உள்ளே சென்றுவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்செரிக்கையுடன் 100-க்கும் மேற்பட்ட பவுன்சர்களை வைத்து தடுத்து நிறுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி மண்டபம் உள்ளே வந்தபோது, ஆரவாரமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியின் மூத்த நிர்வாகிகளை முதலில் பேச சொன்ன எடப்பாடி பழனிசாமி, நேரம் பார்த்துக்கொண்டே இருந்தார்.
நண்பகல் 12 – 1 எமகண்டம் நேரம் கழிந்ததும், மேடைக்கு சென்று தனது பேச்சை தொடங்கினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார்.
பின்னர் அனைவரும் சாப்பிட சென்றனர். மேடையில் எடப்பாடி அருகிலிருந்த நிர்வாகிகள், “அண்ணே… நீங்க சாப்பிட வீட்டுக்கு போறீங்களா… இல்லை இங்கேயே சாப்பிடலாமா?” என கேட்டனர்.
அதற்கு எடப்பாடி, “எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இங்கே சாப்பிட்டுவிடலாம்” என்றார்.
பந்தியில் எடப்பாடி அமர்ந்தபோது, “சைவமா… அசைவமா” என நிர்வாகிகள் கேட்டனர்.
“பிரியாணி சாப்பிடலாம்” என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார்.

கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து எடப்பாடி மகிழ்ச்சியுடன் மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன் ஃபிரை சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்ததும் மண்டபத்தில் இருந்து எடப்பாடி புறப்பட்டார்.
பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், வேலுமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பேசும்போது மாநில அரசையும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பெயரை சொல்லி கண்டித்தவர்கள், மத்திய அரசை கண்டித்து பேசும்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரை உச்சரிக்கவில்லை என்கிறார்கள் பொதுக்குழு உறுப்பினர்கள்.
மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுக்குழு, செயற்குழு நிர்வாகிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதால் நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2034 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
இப்போது மட்டும் வந்த ‘தெலுங்கு’… குகேஷ் பற்றி சந்திரபாபு, பவன் கல்யாண் பதிவு!