அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்துங்கள் என்று ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் இரண்டாம் நாள் விசாரணை இன்று (ஏப்ரல் 21) நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் வந்தது.
ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணன் ஆஜராகி, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.
பொதுச்செயலாளர் தேர்தலில் யாரும் போட்டியிடாதவாறு புதிய விதிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டு வந்தனர். தனி நீதிபதி அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பு விதிகளை கவனிக்க தவறிவிட்டார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக கட்சியில் பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். பொதுக்குழு மூலம் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது.
தொண்டர்கள் மட்டுமே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற அதிமுக விதியை மாற்ற முடியாது.
பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்து வழிமொழிய வேண்டும் என்ற புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
நீதிபதிகள், “இதுபோன்ற விதிகள் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு ஏற்கனவே இருக்கின்ற விதிகள் தானே. புதிதாக உருவாக்கப்பட்டதா” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஓ. பன்னீர் செல்வம் வழக்கறிஞர், “எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு நபர் மட்டுமே ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக இந்த புதிய விதிகள் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதிமுக வில் எனக்கு ஆதரவு இல்லை என்கிறார்கள்.
சென்னை உயர்நிதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துங்கள். கட்சியில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பது தெரிய வரும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இரண்டு நாட்களாக நடைபெற்ற ஓ. பன்னீர் செல்வம் தரப்பின் வாதம் முடிவடைந்த நிலையில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியர் ஆகியோர் தரப்பின் விசாரணைக்காக ஏப்ரல் 24 ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.
செல்வம்
எம்.பில். மருத்துவ உளவியல் படிப்பு: விசிகவின் முக்கிய கோரிக்கை!