அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் பத்து நாட்கள் அவகாசம் கேட்டுள்ளது.
ஜூலை 11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பிரதீபா சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில், “கர்நாடக தேர்தலில் போட்டியிட உள்ளதால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக அங்கீகாரம் அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், “பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளக்கூடாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “அதிமுக தரப்பு டெல்லி நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. அதிமுகவில் எத்தனை அடிப்படை உறுப்பினர்கள் உள்ளனர்” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், “தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்கு என்பதால் தான் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அதிமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர்” என்று பதில் அளிக்கப்பட்டது.
பின்னர் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு நீதிபதி பிரதீபா சிங் ஒத்திவைத்தார்.
செல்வம்
ரோகித் விக்கெட்டை வீழ்த்துவது சாதாரணம்…சிஎஸ்கே வீரர் விளக்கம்!
ஸ்டெர்லைட் வழக்கு: மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு!