அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு: மீண்டும் ஒத்திவைப்பு!

Published On:

| By Jegadeesh

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் 12 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நேற்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. அனைத்து நடவடிக்கைளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். திருத்துவதற்கும், தளர்த்துவதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

கட்சியின் உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தான், ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை என அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிமுக வாதங்களை தொடர்ந்து, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.


இந்நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 9) மீண்டும் விசாரணைக்கு வந்தது.


விசாரணை தொடங்கியதும், அதிமுக தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதங்களை முன்வைத்தார். எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது அதிமுக பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை வகுத்தார். அந்த விதியை மாற்ற முடியாது.

கட்சியின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டுவது தவறு என்று எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வாதங்களை வைத்துள்ளார்.


மேலும், “அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் நிறைவேற்றப்பட்டது. கட்சி அலுவலகத்தில் பன்னீர்செல்வம் நுழைந்ததை அத்துமீறல் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என வாதம் வைத்தார்.

இதையடுத்து, அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (ஜூன்12) ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் சொன்ன குட் நியூஸ்!

அமைச்சரவை மாற்றமா? ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்ய பதில்!