அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி19) தள்ளுபடி செய்திருக்கிறது. OPS appeal petition dismissed
2022 ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆகவும் அந்த பொதுக்குழு தேர்வு செய்தது.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த பொதுக் குழு மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
2023 ஆகஸ்டு 25 ஆம் தேதி இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் பன்னீர் செல்வம்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டில் அமர்வு கடந்த டிசம்பர் 8-ந் தேதி விசாரித்தது. பின்னர் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
அதன் பின் இன்று (ஜனவரி 19) வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பன்னீர்செல்வம் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால்,
“அதிமுக சட்டவிதிகளுக்கு எதிராக பன்னீர் நீக்கப்பட்டிருக்கிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழுவால் நீக்க முடியாது. எனவே பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதாடினார்.
இந்த நிலையில் இன்று பன்னீர்செல்வத்தின் மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
“அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை.
உங்கள் கோரிக்கைப்படி இடைக்காலத் தடை விதித்தால் உங்கள் வழக்கை ஏற்றதாக ஆகி விடும். நீதிமன்றம் தலையிட்டால் உட்கட்சி பிரச்சினை பூதாகரமாக மாற வாய்ப்புள்ளது.
பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலைமை மோசமாகிவிடும்” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதேநேரம், “இந்த விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சிவில் சூட் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
இது தொடர்பாக அதிமுகவின் சட்டத் துறை இணைச் செயலாளர் பாபு முருகவேல்,
“அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதன் மூலம், ஒ.பன்னீர் செல்வத்தின் சட்டப் போராட்டம் முழுமையான தோல்விகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. பன்னீர் செல்வத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் ஊக்குவிக்க விரும்பவில்லை. அதனால்தான் அவரது மனு மீது எதிர் தரப்புக்கு நோட்டீஸ் கூட அனுப்பாமல் தள்ளுபடி செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’டிடி தமிழ்’… மக்கள் எதிர்ப்பார்க்கும் நிகழ்ச்சிகள் இருக்கும்: எல்.முருகன்
சத்யராஜுடன் சரிசமமாக நடிக்க ஆசை… விஜய் சேதுபதி ஓபன் டாக்!
OPS appeal petition dismissed