இன்று (ஜூலை 11) நடைபெறும் பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்கள் நள்ளிரவில் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தால் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவும். அந்த வகையில் இன்று அதிமுக பொதுக்குழு நடைபெறுமா? நடைபெறாதா? தீர்ப்பு எப்படி வரும்? தலைமைக் கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்பாரா? என உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் உள்ளனர். இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் விடை கிடைத்து விடும்.
தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்று அதீத நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் செய்துள்ளனர்
இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி – பெங்களூரு நெடுஞ்சாலை முதல் மண்டபம் இருக்கும் பகுதி வரை பிரமாண்ட பேனர்களும், அதிமுக கொடிகளும் நடப்பட்டுள்ளன. ஆனால், இதில் ஒரு இடத்தில்கூட பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இடம்பெறவில்லை.
இந்தச் சூழலில் அதிமுக பொதுக்குழுவுக்கு வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் நள்ளிரவில் கிழிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும், பொதுக்குழுவுக்காகப் பிரமாண்ட செட்டை அமைக்கும் பணிகளைப் பொறுப்பேற்று கவனித்து வந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் புகைப்படம் கொண்ட பேனர்களையும் அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் கிழித்துச் சென்றுள்ளனர்.
சுமார் 30க்கும் மேற்பட்ட பேனர்களைக் கிழித்துள்ளனர். ஏற்கனவே ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் இது போன்று கிழிக்கப்பட்டன. இந்தச்சூழலில் மீண்டும் பேனர்கள் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை முதல் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர்.
-பிரியா