நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஆகஸ்ட் 10) விசாரணைக்கு வந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, நாளைக்கு (ஆகஸ்ட்11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக்குழு வழக்கில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விலகியதை அடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 10) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ”பொதுக்குழுவை கூட்டக் கோரி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அழைப்பு விடுக்க முடியும். அவர்கள் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். இது சம்பந்தமான விதிகளை அவர்கள் பின்பற்றவில்லை” என வாதத்தை வைத்தார்.
அதன்பிறகு பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில், “நிகழ்ச்சி நிரல் வெளியிடுவதில்லை என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி எந்தக் கூட்டமும் கூட்டக் கூடாது என்பதே எங்கள் வழக்கின் முதல் கோரிக்கை” என்று அவர்கள் வாதத்தை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயநாராயணன், “கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்ட முடியும்.
பொதுச் செயலாளர் பதவியைக் கலைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டபோதும் தேர்வு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இல்லாவிட்டால், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர் ஆகியோர் கட்சியை நிர்வகிக்க விதிகள் வகை செய்வதால், தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை” என வாதத்தை வைத்தார்.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், “பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா, நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் எனக்கூறி அந்தப் பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அந்தப் பதவியை உருவாக்கியது ஏன், தமிழ்மகன் உசேன் கட்சி விதிகளின்படி நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்பட்டாரா? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து விளக்கம் தர வேண்டும்” என உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை நாளை (ஆகஸ்ட் 11) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார்.
ஜெ.பிரகாஷ்