அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை இந்த வாரத்திற்குள் முடிக்க செய்ய விரும்புகிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவை எதிர்த்தும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன் விசாரணையிலிருந்து வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மற்றொரு மனுதாரரான வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித் குமாா், ஹாரேன் ராவல், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ். வைத்தியநாதன், விஜய் நாராயணன், ஆரியமா சுந்தரம், கே.வி. விஸ்வநாதன், அதுல் சிட்லே உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 4) பிற்பகல் மீண்டும் பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தானே? அதிமுக பொதுக்குழு வழக்கில் அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு காரணமாக கட்சிப்பணிகள் தேங்கிக் கிடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
அதோடு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுகளை எடப்பாடி தரப்பு நீதிபதிகள் முன் விவரித்தது. இதைக் கேட்டு நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரே கோரிக்கையை வலியுறுத்துகின்றனவா? யார் யார் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்? அவர்கள் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து எடப்பாடி தரப்பில், “கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவின் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, “பொதுக்குழுவுக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றால், அந்த கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும் அதன் கீழ்தானே வரும்” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சார்பில், “விதிகளின் படிதான் பொதுக்குழு கூட்டப்பட்டது.
5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததால் மட்டுமே பொதுக்குழுக் கூட்டம் முடியும். அதன்படிதான் அன்றைய தினம் பொதுக்குழுவும் நடைபெற்றது” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தல் வைத்துத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, ”பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று ஈபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர்.
இதற்கு ஓபிஎஸ் தரப்பில், அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது? தேர்தல் வைக்கப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, “இந்த பதவிகளுக்கு யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.
இருவரும் போட்டியின்றி நேரடியாகவே ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்” என்று ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர்.
மேலும், “ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது அனுமதி இல்லாமல் கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டுவதற்கு, சில வாரங்கள் முன்பு தேர்தல் தொடர்பான ஆவணங்களில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில்தான் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
முந்தைய பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரித்து, பொதுக்குழுக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும்,
புதிய அவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்து அடுத்த பொதுக்குழு செயற்குழுவிற்குத் தேதி அறிவித்தது சட்டவிரோதம்” என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜூலை 11ஆம் தேதிக்கு பின்னர்தானே அனைத்தும் மாறியது. அப்படி தானே? நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “ஜூலை 11ஆம் தேதி முந்தைய நிலைப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தொடர வேண்டும். அன்றைய தினம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் “ என்று ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
பின்னர், எந்த விளக்கமும் கேட்காமல் ஓபிஎஸை நீக்கியது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு எடப்பாடி தரப்பில், “ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் ” என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள் யார் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்று நாங்கள் கருத்தில் கொள்ள வில்லை. கருத்தில் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து ஓபிஎஸ் தரப்பில், வாதங்களை முன்வைக்க 2 மணி நேரம் தேவை என்று கேட்கப்பட்டது. ஈபிஎஸ் தரப்பில் ஒன்றரை மணி நேரம் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு நீதிபதிகள் இந்த வழக்கை இந்த வாரமே நாங்கள் முடிக்க விரும்புகிறோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையின் போது வழக்கறிஞர்கள், ஆவணங்கள் அனைத்தும் தமிழில் இருக்கிறது என்று கூற, “தமிழ் ஒரு தனித்துவமான மொழி” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பிரியா
மெட்ரோ ரயில் திட்டம்: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!
உயிர்களை பலி வாங்கும் மதுரவாயல் சாலை: அரசு கவனிக்குமா?