அதிமுக பொதுக்குழு வழக்கு : இன்று விசாரணை!

Published On:

| By Kavi

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (செப்டம்பர் 30) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

நீதிமன்ற தீர்ப்புகள் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்புக்கு இடையே மாறி மாறி வரும் நிலையில் இன்றைய விசாரணையில் யார் கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

கடந்த ஜூன் 14ஆம் தேதி அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்டது முதல் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் தரப்புக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது. இதையடுத்து ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என ஈபிஎஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பினர் மாறி மாறி நீதிமன்ற படியேறி வருகின்றனர்.
இதில் இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் தீர்ப்பு மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.

‘ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது. ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரா உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

இதனால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார்.
ஆனால் இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், அதிமுக தலைமை கழக தரப்பிலும், ஓபிஎஸ் மனுவை விசாரிக்கும் போது எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஏழாவது அமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி முன்பு விசாரணைக்கு வருகிறது.

ஏற்கனவே உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றத்துக்கே அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் இன்றைய விசாரணை எந்த கோணத்தில் செல்லும், யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரியா

”அப்படி கூப்பிடாதீங்க”: 90’S கிட் கார் ஓட்டுநரின் வேண்டுகோள்!

காங்கிரஸ் தலைவர் ரேஸில் மல்லிகார்ஜுன கார்கே?