அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கிறதா, இல்லையா என்பதை பிரதான வழக்கு தான் முடிவு செய்யும் என்று 2 நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
தனி நோட்டீஸ் தேவையில்லை
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை தீவிரமாக பரிசீலித்ததாக தெரிவித்துள்ள நீதிபதிகள், பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், “ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்தப்படும் என்று ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்திலேயே அறிவிக்கப்பட்டதே நோட்டீஸ் தான்.
எனவே சிறப்பு பொதுக்குழுவுக்கென்று தனியாக நோட்டீஸ் அனுப்பத் தேவையில்லை.
பொதுக்குழு கூட்டப்பட்ட முறை சரியே
ஜூன் 23ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முன்பு தான் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்துவது பற்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே பொதுக்குழு நடந்தது தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் மறுக்கமுடியாது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் பொதுக்குழுவை கூட்ட கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடமுடியாது. எனவே தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு கூட்டப்பட்டது சரியே.
பொதுக்குழுவுக்கே அதிகாரம்
2460 பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். 2539 உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழுவை பெரும்பான்மையானவர்கள் எதிர்க்காதபோது கூட்டம் செல்லாது என்று சொல்ல முடியாது.
அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் உள்ள பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது.
பிரதான வழக்கு தான் தீர்மானிக்கும்
பொதுக்குழுவையோ, செயற்குழுவையோ ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து தான் கூட்டவேண்டும் என்பது கட்சியை முடக்கும் செயலாகும்.
எனவே தனிநீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும்,
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பதை பிரதான சிவில் வழக்கில் தான் தீர்மானிக்க முடியும்.
உட்கட்சி விவகாரங்களில் சிவில் வழக்கு தொடரமுடியாது என்று கூற இயலாது. அதுதொடர்பான பிரதான உரிமையியல் வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்னும் விசாரணையில் உள்ளது.
வழக்கின் இறுதி வாதங்களுக்கு பிறகே அதுபற்றி தெரிவிக்கமுடியும்” என்றும் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தெரிவித்துள்ளது.
வழக்கு முடியவில்லை
அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக பொதுக்குழு கூட்டப்பட்டது, பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்ட முறை தவறானது என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் தான் தனிநீதிபதி ஜெயச்சந்திரன் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மட்டும்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கிறதா, இல்லையா, பொதுக்குழுவுக்கு அதை அங்கீகரிக்கும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பது தொடர்பான பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது.
கலை.ரா
பொதுக்குழு தீர்ப்பால் எந்த சஞ்சலமும் இல்லை : ஓ.பி.எஸ் தரப்பு!