அதிமுக பொதுக்குழு அப்பீல்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தாமதம் ஏன்? 

அரசியல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று (நவம்பர் 21) உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பகல் வரையிலான நிலவரப்படி வழக்கு இன்னமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொதுக்குழுவிலேயே ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,  “ஜுலை 11 பொதுக்குழு செல்லாது. ஜூன் 23 க்கு முந்தைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிலையே நீடிக்கும்” என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன்  ஆகியோர் அடங்கிய அமர்வு,  தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது.  ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரது ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்ச நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் தங்களை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என்று எடப்பாடி தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

AIADMK general body appeal Supreme Court hearing delay

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, ‘இந்த வழக்கு முடியும் வரை பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த மாட்டோம்’ என்று எடப்பாடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில்  தெரிவித்தது.

மேலும் இவ்வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 21 ஆம் தேதி நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தது.

இதற்கிடையே நவம்பர் 19 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து,

’அதிமுக கட்சி விதிப்படி பன்னீர்செல்வம் கட்சியில் எந்த நிவாரணம் பெற தகுதியற்றவர். அவரது மனு அற்பமான ஒன்று. பொதுக்குழு அனைத்து விதிகளையும் கருத்தில் கொண்டுதான் கூட்டப்பட்டது’ என்று தெரிவித்திருந்தார் எடப்பாடி.

இந்த பின்னணியில் இன்று (நவம்பர் 21) இவ்வழக்கின் இறுதி விசாரணைக்காக எடப்பாடி, பன்னீர் ஆகிய இரு தரப்பினரும் காத்திருந்தனர். இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆதரவாளர்களும் டெல்லியில் முகாமிட்டனர்.

ஆனால் இன்று பகல் வரை உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அப்பீல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் விசாரித்தோம். “ உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இரண்டாவது பட்டியலில் 68 ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. முதல் பட்டியலிலேயே சுமார் 55 வழக்குகள் இருக்கின்றன.

முதல் பட்டியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகுதான் இரண்டாவது பட்டியலில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வாய்ப்பிருக்கிறது. எனவே காத்திருக்கிறோம்” என்கிறார்கள். 

இதற்கிடையே இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

வேந்தன்

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *