ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நாகர்கோவிலை அடுத்த ஈசாத்தி மங்கலம் பகுதியில் இருந்து பூதப்பாண்டி வரை கடந்த 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. அதனை ஈசாந்தி மங்கலத்தில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், தளவாய் சுந்தரத்தை கட்சிப் பொறுப்பில் இருந்து இன்று (அக்டோபர் 8) நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். தளவாய்சுந்தரம், தான் வகித்து வரும் அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா