கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஜனவரி 4)விசாரணைக்கு வருகிறது.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல்செய்தார். இந்த பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதுபோன்று எடப்பாடி பழனிசாமியும் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு அனுப்பிய அதிமுக வரவு செலவு குறித்த கடிதத்தை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றியது.
அதே சமயத்தில், வரும் ஜனவரி 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் நடத்த இருக்கும் கூட்டத்திற்கு அதிமுகவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருமுறை வந்த கடிதத்தையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருப்பி அனுப்பினர்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் இது குறித்து தேர்தல் ஆணையம் எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்க தயாராகி வருகின்றனர்.
பிரியா
ரஷ்யா – உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்?