அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் நடத்திய சட்டப் போராட்டத்தில் அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மக்கள் மன்றத்தை சந்திக்க போவதாக அறிவித்து திருச்சியில் மாநாடு நடத்தினார். புரட்சி பயணம் என்ற பெயரில் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கை தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், “தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் என்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவின் கொடி. சின்னம், பெயர் போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
செல்வம்
காவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!