அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில் ஓபிஎஸ் பதில் மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக சின்னம், கொடி, பெயரை பயன்படுத்தக்கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கை தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், “தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் என்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவின் கொடி, சின்னம், பெயர் போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “அதிமுகவிலிருந்து பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தநிலையில் கட்சி சின்னத்தையும், கொடியையும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். இது சட்டவிரோதம். எனவே கட்சி கொடி, பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓபிஎஸ் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார
செல்வம்