AIADMK first public meeting in kanchipuram

அதிமுகவின் முதல் பொதுக்கூட்டம்… ஆசிட் மிரட்டலுக்கு இடையே எப்படி வந்தார் எம்.ஜி.ஆர்?

அரசியல்

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

அதிமுக தொடங்கி இன்று 52 ஆவது ஆண்டு விழாவை அக்கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் 1972 ஆம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கும்போது அவர் எதிர்கொண்ட போராட்டங்கள், மிரட்டல்களை எல்லாம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வரலாறாக பதிவு செய்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏழுமலை வெங்கடேசன்.

“அக்டோபர் 8ஆம் தேதி கணக்கு கேட்டதால் அடுத்த இருநாட்களில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், ஒரே வாரத்தில் அதிமுகவை ஆரம்பித்தார். முதல் பொதுக்கூட்டம் 24.10.1972 அன்று காஞ்சிபுரம் தேரடியில்.

கூட்டத்திற்கு கலெக்டர் அனுமதி தரவில்லை. ஏற்பாட்டாளர்களையும் உள்ளே தூக்கிப்போட கிடுகிடுவென வேலைகள் நடந்தது. மாவட்ட எம்ஜிஆர் மன்றத் தலைவர் கே.பாலாஜி, தலைமறைவாக இருந்தபடியே வேலைகளை செய்து வந்தார்.

எம்.ஜி.ஆர்., மீது ஆசிட் வீச திட்டம்!

இன்னொருபுறம் காஞ்சிபுரம் வரும்போது எம்ஜிஆரை தாக்க ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆசிட் கையுமாய் ஒரு கும்பல் தயாராகிக் கொண்டிருந்தது.

இதை உணர்ந்துவிட்ட ராமாவரம் தோட்டம் தரப்பு, எம்ஜிஆருக்கு அன்றைய தினம் கடுமையான காய்ச்சல் இருப்பதை சுட்டிக்காட்டி அவர் காஞ்சிக்கு போகவே கூடாது என தடைவிதித்தது. அவர் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்ற ரீதியிலும் தகவலை பரப்பியது.

காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்துக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு இது தெரியவர, பதற்றமும் பரபரப்பும் மேலும் எகிறிவிட்டது. கூட்ட ஏற்பாட்டாளரான பாலாஜி, உடனே ராமாவரம் தோட்டத்துக்கு ஓடினார்.

‘’கூட்டத்திற்கு வரவில்லை யென்றால், இங்கேயே மரத்தில் தொங்கி உயிரை விட்டுவிடுவேன்.. காஞ்சி மண்ணுக்கு வந்து நீங்கள் பத்திரமாக திரும்ப அத்தனை பேரும் உயிரைக் கொடுப்போம்.

அண்ணா பிறந்த எங்கள் காஞ்சிதான் உங்கள் எதிர்காலத்திற்கே மீண்டுமொரு முறை திறவுகோல். உங்கள் தைரியத்தை உலகுக்கு காட்ட இன்னொரு சான்ஸ்.. வாருங்கள்’’ என்று பாலாஜி வார்த்தைகளை அள்ளிக்கொட்ட, அதன்பின் எம்ஜிஆரால் மறுப்பே சொல்லமுடியவில்லை..

ரூட்டை மாற்றிய எம்.ஜி.ஆர்.

இருந்தாலும் ஸ்ரீபெரும்புதூர் தாக்குதல் அபாயம் இருப்ப தால் பூந்தமல்லி, பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் என வழக்கமான பாதையை தவிர்த்துவிட்டு மாற்றுப்பாதை யோசிக்கப்பட்டது.

படப்பை வாலாஜாபாத் வழியாக சின்ன காஞ்சிபுரம் வந்து தேரடி பள்ளிவாசல்வரை எட்டிவிடுவது..

ஆள்நடமாட்டம் இல்லாத அந்த புதர் பகுதிக்குள் ஊடுருவி வெளியே வந்து பொதுக்கூட்ட மேடையில் எம்ஜிஆர் திடீரென தோன்றுவது.. இதுதான் புதிய திட்டம்.

அரசியல் எதிரிகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எம்ஜிஆர் மேடையேறிய அந்த காட்சிகளை அவ்வளவு சுலபத்தில் விவரித்துவிடமுடியாது.

ஒருவழியாய் இப்படித்தான், பல திரில்லிங்கான கட்டங்களை தாண்டி காஞ்சிபுரம் தேரடியில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் தோன்ற, மக்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம்பிடித்தது.

மைக்கை பிடித்த எம்ஜிஆர் ஒருமணிநேரம் அரசியல் எதிரிகளை விளாசித்தள்ளி பேசினார்.

குதிரைப்படையில் வந்து நடிகர் ஆனந்தன் கொடிபிடித்து வர, காஞ்சிபுரம் தேரடியில் அண்ணா உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
                                                                     

காஞ்சிபுரம் செயல்வீரர்களுக்கு எம்.ஜி.ஆர். தந்த பரிசு!

மேலே இதுவரை நாம் சொன்ன விஷயங்களை எல்லாம் கே.பாலாஜி, காஞ்சி பன்னீர்செல்வம் போன்றவர்கள் அடிக்கடி நம்மிடம் மெய் சிலிர்த்து சொல்வதை அடிக்கடி கேட்டிருக்கிறோம்.

AIADMK first public meeting in kanchipuram
அதிமுக ஆரம்பித்த போது எம் ஜி ஆர் உடன் திமுகவில் இருந்து வெளியேறி காஞ்சிபுரத்தில் கட்சிக்காக உழைத்தவர்களில் மிக முக்கியமானவர்கள் கே பாலாஜியும் காஞ்சி பன்னீர்செல்வமும்.

1977 சட்டமன்றத் தேர்தல் வரும் போது கே. பாலாஜியை வேட்பாளராக நிறுத்த எம்ஜிஆர் தீர்மானித்தார். பாலாஜி காஞ்சிபுரத்தில் தள்ளுவண்டியில் சோன்பப்டி விற்கும் தொழில் செய்து வந்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்துக்காக கடுமையாக உழைத்தவர். அவரை தேர்தலில் நிறுத்த விரும்பிய எம்.ஜி.ஆர். இதற்காக பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்த நேரில் அழைத்தார். ‘என் அன்பு வேண்டுமா, சீட்டு வேண்டுமா?’ என்று கேட்டார்.

“தலைவரே நீங்கள் யாரை நிறுத்தினாலும் அண்ணா பிறந்த ஊரில் வெற்றிக்கனியை பறித்துக் கொண்டு வந்து உங்கள் காலடியில் வைப்பது தான் என்னுடைய முதல் வேலை” என்று எம்.ஜி.ஆரிடம் உறுதிகொடுத்தார் பன்னீர்செல்வம்.

வார்த்தைகளைக் கேட்டதும் நெகிழ்ந்து போன எம்ஜிஆர் பன்னீர்செல்வத்தை தட்டி கொடுத்து இந்தக் கட்சி உங்களை உயர்த்தாமல் விடாது என்று உறுதி அளித்து வழி அனுப்பி வைத்தார்.

கே.பாலாஜி மற்றும் காஞ்சி பன்னீர்செல்வம் இருவருமே அப்போது தேர்தலில் செலவு கூட செய்ய முடியாத நிலையில் இருந்த சாமானியர்கள்.

இரு தொண்டர்களுக்கும் எம்ஜிஆர் அளித்த வாக்கு பலித்தது.  கே. பாலாஜி இரண்டு முறை காஞ்சிபுரத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காஞ்சி பன்னீர்செல்வம், எம்எல்ஏ, எம்பி என அதிமுகவில் உயரத்துக்கு போனார்” என்று பதிவிட்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிகாலைக் காட்சி: உயர்நீதிமன்றம் மறுப்பு- மீண்டும் அரசிடம் பேசும் லியோ தரப்பு!

விஜய்யின் லியோ: அதிகாலை காட்சியில் அதீத ஆர்வம் ஏன்?

லியோ சிறப்பு காட்சி… நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுப்படணும்: அமைச்சர் ரகுபதி

 

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *