நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. பாஜக அல்லாத வலுவான கூட்டணி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை அதிமுக செய்து வருகிறது.
அந்தவகையில், இன்று முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டோர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்றுடன் (மார்ச் 1) நிறைவடைந்த நிலையில், மார்ச் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற நிர்வாகிகள் தங்களுடைய விருப்ப மனுக்களை அதிமுக தலைமைக் கழகத்தில் 21.2.2024 முதல் 1.3.2024 வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் தங்களுடைய விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்துத் தருமாறு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, 6.3.2024 – புதன் கிழமை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
எனவே, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள், மேற்கண்ட தேதிக்குள் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருமா – செல்வப்பெருந்தகை சந்திப்பு: காரணம் இதுதான்!
‘டாணாக்காரன்’ தமிழின் அடுத்த ‘ஹீரோ’ இவர்தான்!