தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில், ஏற்கெனவே உள்ள கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
குறிப்பாக திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தங்கள் பக்கம் இழுப்பதற்கு மற்ற கூட்டணி தலைமை கட்சிகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 17) நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை பேச்சால் சர்ச்சை வெடித்தது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடந்த வழக்கறிஞர்கள் மாநாட்டில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக நிர்வாகி இன்பதுரை, விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் இன்பதுரை பேசுகையில், “திருமாவளவன் எந்தப் பக்கம் செல்வார் என்று தமிழ்நாடே காத்திருக்கிறது. அவர் நல்லவர்களோடு இருப்பார். திருமாவளவன் நம்மோடுதான் இருப்பார்” என்று பேசினார். இதனைக் கேட்டு அரங்கத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
எனினும் அந்த மாநாட்டு மேடையிலேயே இன்பதுரைக்கு திருமாவளவன் பதிலளித்தார்.
இன்பதுரைக்கு நான் அளிக்கும் பதில்!
அவர், “விசிக மக்களோடு தான் நிற்கும். இதுதான் நான் இன்பதுரைக்கு அளிக்கும் பதில். மக்கள் பிரச்சனை என்றால் மக்களுக்காக கட்சி அடையாளங்களை கடந்து விசிக நிற்கும். தேர்தல் அரசியல் வேறு, மக்களுக்காக போராடுவது என்பது வேறு. தேர்தல் அரசியல் என்பது கட்சி நலன். காலச் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்” என்று திருமாவளவன் பதிலளித்தார்.
தொடர்ந்து மாநாடு முடிந்து வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்த போதும், “விசிக வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா கூட்டணியில் தற்போது இருப்பதால், வேறு கூட்டணியை நாங்கள் உருவாக்க தேவையும் இல்லை” என்று மீண்டும் விளக்கம் அளித்தார்.
திருமாவளவன் கூட்டணி குறித்து அறிவிப்பது இது ஒன்றும் முதல்முறையல்ல. கடந்த சில மாதங்களாக விசிக மீது அடுத்தடுத்து வரும் கூட்டணி தொடர்பான சர்ச்சை கேள்விக்களுக்கு தொடர்ந்து பதில் அளித்து வருகிறார்.
மது ஒழிப்பு மாநாட்டு சர்ச்சை!
கடந்த மாதம் காந்தி ஜெயந்தி அன்று விசிக நடத்திய மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் அதிமுக உட்பட எந்தக் கட்சியும் கலந்துகொள்ளலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விசிக திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறதா என்று பேச்சு எழுந்து அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்த திருமாவளவன், “மது ஒழிப்பு மாநாடு என்பது தேர்தல் கணக்கு அல்ல. இது மக்களின் நலன் சார்ந்தது. கூட்டணிக்கும் இதற்கும் தொடர்பு அல்ல” என அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரிய வீடியோ!
அதைத் தொடர்ந்து திருமாவளவனின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், திருமாவளவன் பேசிய ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் பழைய வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இதுவும் திமுகவுக்கு நெருக்கடியா, கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா விசிக என விவாதங்கள் எழுந்தன. இதற்கு பதில் அளித்த திருமாவளவன், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என 1999ல் பேசினேன். அதை நினைவு படுத்தி நேற்று செங்கல்பட்டில் நான் பேசியதை என் அட்மின் எடுத்து பதிவு செய்துள்ளார்கள்” என்று விளக்கம் கொடுத்தார்.
விஜய் பேச்சுக்கு திருமா ரியாக்சன்!
தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்திய விஜய், அந்த மாநாட்டில் தனது கட்சி கொள்கைகளில் ஒன்றாக ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார்.
விசிகவின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை அவரும் பேசியதால், மீண்டும் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகல் என பல தகவல்கள் பரவின.
இதற்கும் பதில் அளித்த திருமாவளவன், “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பங்குண்டு. அதாவது, நாமும் சேர்ந்து உருவாக்கியது தான் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி. அதனை தக்க வைப்பதும் பாதுகாப்பதும் நமக்குமான கடமைகளாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஒரு கூட்டணியில் இடம் பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறபோது, நாம் இன்னொரு கூட்டணிக்குப் போவதற்கோ அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ என்ன தேவை எழுந்துள்ளது? என விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஒ.செ.க்களுக்கு புதிய பொலீரோ… அசத்திய அரியலூர் அரிமா சிவசங்கர்