கடலூர் அதிமுக நிர்வாகி புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டதற்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினை, எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 30) வலியுறுத்தி உள்ளார்.
கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன் (வயது 45). முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன், அதிமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 29) இரவு புஷ்பநாதன் புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் சென்ற மர்ம கும்பல் புஷ்பநாதனை வழிமறித்து நடுரோட்டில் வைத்து சரமாரியாக அாிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து தகவலறிந்த கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, புகாரின் பேரில் கடலூர் முதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 30) வெளியிட்ட பதிவில், “கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். இந்த ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.
பகல்-இரவு என்று பாராமல், மக்கள் எப்போதும் அச்சத்துடனே நடமாடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்க, தான் சட்டம் ஒழுங்கை சிறப்புற காத்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக்கொள்வது நகைமுரண்.
புஷ்பநாதனை படுகொலை செய்தோரை துரிதமாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? – வானிலை மையம் அப்டேட்!
டி20 உலக கோப்பை வெற்றி: இந்திய அணியை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!