வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை பதிவேற்றவில்லை என்ற தேர்தல் ஆணையத்தின் பதில் படு அராஜகம் என்று அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்பிற்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் இதுகுறித்து மூன்று நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் நாங்கள் பொதுக்குழு தொடர்பான தீர்மானங்களை ஏற்கவில்லை என்றும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதை தேர்தல் நடத்தும் அலுவலர் தான் முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வழக்கு நிலுவை. எனவே அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை பதிவேற்றவில்லை என்ற தேர்தல் ஆணையத்தின் பதில் படு அராஜகம். சசிகலாவின் வழக்கும் நிலுவைதானே? ஓபிஎஸ் பெயரை மட்டும் எப்படி பதிவேற்றம் செய்தீர்கள்? சிவில் வழக்கு 20வருடம் நிலுவை எனில் அதுவரை சின்னத்தை ஒதுக்காமல் கட்சியை முடக்குவீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையம் குறித்த அவரின் விமர்சனம் அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்