வேலுமணி வழக்குகள்: ஒரு பிளஸ், ஒரு மைனஸ் – தீர்ப்பு விவரம்!

அரசியல்

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வருமானத்திற்கு அதிகமாக ரூ.58கோடி சொத்து சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையானது நீதிபதிகள் பி.என்.ரமேஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலுமணி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.என்.ராஜூ மற்றும் ரவி ஆகியோர் ஆஜராகி, “சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியதில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்த தொடர்பும் இல்லை.

வெளிப்படையான முறையில் டெண்டர் ஒதுக்கப்பட்டது. அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட இந்த வழக்கு ரத்து செய்ய வேண்டும்.” என்று வாதிட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “மத்திய தணிக்கைத்துறை அறிக்கையின் அடிப்படையில் தான் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் உள்ளது.” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அறப்போர் இயக்கத்தின் சார்பில், “ஒரே ஐபி முகவரியில் மாநகராட்சி டெண்டர்கள் எஸ்.பி.வேலுமணி உறவினர் மற்றும் நெருங்கியவர்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் ஆதாரங்களை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவை மற்றும் சென்னை மாநகராட்சியில் முறைகேடாக டெண்டர் ஒதுக்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை ரத்துசெய்தனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தனர்.

செல்வம்

தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள்: ரூ.420 கோடி ஒதுக்கீடு!

3வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு 220 ரன்கள் இலக்கு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.